அதிமுக வேட்பாளரை எதிர்த்து களமிறங்கும் முன்னாள் அமைச்சர்! அப்செட்டில் அதிமுக தலைமை
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கடந்த முறை அதிமுக சார்பில் போட்டியிட்ட பலருக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.இதில் பலர் முன்னாள் அமைச்சர் பதவி வகித்தவர்களும் அடங்குவர்.இந்நிலையில் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கபடாமல் போனது குறித்து பல யூகங்கள் வெளிவந்த நிலையில் உள்ளன.
வாய்ப்பு கிடைக்காதவர்கள் அமைதியாக இருப்பார்களா அல்லது தலைமையை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் இருந்தது.அதற்கேற்ப தற்போது அதிமுகவின் சீனியரும்,முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்குகிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தோப்பு வெங்கடாசலம் அமைச்சர் ஆக்கப்பட்டார். ஆனால் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு அவர் மீண்டும் வெற்றி பெற்றிருந்தாலும் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை.அப்போதிலிருந்தே அவர் கடும் அதிருப்தியில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிடவே வாய்ப்பில்லை என்றதும் மேலும் அதிருப்தி அடைந்துள்ளார்.இதனையடுத்து தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்த அவர் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்பமனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,இப்போதும் நான் அ.தி.மு.க.வில் தான் இருக்கிறேன். எனது சட்டைப்பையில் அம்மா ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் படங்கள் தான் உள்ளன. நான் கட்சிக்கு எதிராக செயல்படவோ, வேறு கட்சிக்கு ஆதரவு அளிக்கவோ, கட்சி மாறவோ இல்லை. என்னை நம்பிய பெருந்துறை தொகுதி மக்களுக்கு நான் செய்ய வேண்டிய பணி இருக்கிறது. இந்த தொகுதிக்கு யார் எம்.எல்.ஏ.வாக வேண்டும் என்று மக்கள் முடிவு செய்யட்டும்” என்று அவர் தெரிவித்தார்