சமூக விலகல் எங்கே? கோவையில் சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சரின் கொரோனா ஆய்வுக் கூட்டம்

சமூக விலகல் எங்கே? கோவையில் சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சரின் கொரோனா ஆய்வுக் கூட்டம்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கமானது அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட மருத்துவர்கள், காவல் துறை அதிகாரிகள் என அனைவரும் Social Distancing என்று கூறப்படும் சமூக விலகலைக் கடைப்பிடிக்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தி வருகின்றனர். இந்த சமூக விலகலை ஏற்படுத்த தான் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொது மக்களை வீட்டிலேயே இருங்கள் என்று மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன.

இவ்வாறு சமூக விலகலை வலியுறுத்தும் அரசு நிர்வாகமே, சமீபத்தில் கோவையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் அதை மீறியுள்ள சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தினார்.

ministers review meeting over corona virus in coimbatore
ministers review meeting over corona virus in coimbatore

இந்த கூட்டம் தொடர்பாக செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அறிவிப்பில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சமூக இடைவெளி விட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் என்றும் கூறியிருந்தனர். ஆனால், ஆய்வுக் கூட்டம் நடத்திய அரசு நிர்வாகமே அவர்கள் கூறிய சமூக விலகலைக் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.

அந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார், மாநகரக் காவல்துறை ஆணையர் சுமித்சரண், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் கலந்து கொண்ட அந்த ஆய்வுக் கூட்டத்தில் பெரிதாக பிரச்னை இல்லை என்றும், அந்தக் கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்திக்க அவர்கள் வெளியே வந்த பிறகுதான் பிரச்னையே தொடங்கியது என்றும் கூறப்படுகிறது.

ministers review meeting over corona virus in coimbatore
ministers review meeting over corona virus in coimbatore

கூட்டம் முடிந்து வெளியில் வந்த பிறகு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாகப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில், அமைச்சர் வேலுமணி, அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்ட யாருமே அரசு வலியுறுத்தும் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல், மிகவும் அருகருகே நின்றுள்ளனர். மேலும் அப்போது நடந்த செய்தியாளர் சந்திப்பிலும் அவர்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு அந்த நிகழ்ச்சியை நடத்திய அரசு நிர்வாகம் மட்டுமல்லாமல், அங்கு செய்தி சேகரிக்க வந்த ஊடகங்களும் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் அருகருகே நின்றுள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

ministers review meeting over corona virus in coimbatore
ministers review meeting over corona virus in coimbatore

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் இந்த சூழ்நிலையில், அரசு அதிகாரிகளும்,ஊடகங்களும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல, இவர்களை பார்த்து பொது மக்களும் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதில்லை என்றும் விமர்சனம் எழுப்பபடுகிறது. இனியாவது சூழ்நிலையை உணர்ந்து அரசு அதிகாரிகளும், பொது மக்களும் சமூகவிலகலை கடைபிடிக்க வேண்டும்.

Leave a Comment