இளைய தளபதியை சிக்க வைத்த ரசிகர்கள்! காவல் துறை அதிரடி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவர் நடிக்கும் படங்களில் கதை எப்படி இருந்தாலும் அவருக்காகவே பார்க்கும் ரசிகர்கள் நிறையவே உள்ளனர். தற்போது இவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டு பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஆதரவாக அவரை அரசியலுக்கு இழுக்கும் விதமாக அரசியல் சம்மந்தப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து மதுரையை போலவே தேனி மாவட்டத்திலும் அவருக்கு ஆதரவாகவும்,வேறு சில நடிகர்களுக்கு ஆதரவாகவும் அரசியல் சார்புடைய வகையில் அடிக்கடி பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டுவது வாடிக்கையாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் நடிகர் விஜய்யை இணைத்து அவரது ரசிகர்களால் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில் வருங்கால முதல்வரே என்றும், நாளைய தமிழகமே என்றும் அரசியல் சார்புடைய வாசகங்களுடன் அந்த போஸ்டர் அமைந்திருந்ததால் அதனை காவல் துறையினர் அகற்றினர்.
சமீபத்தில் மேலும் சில இடங்களில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ‘‘தமிழ் சினிமாவில் கலெக்ஷன்னாலும் சரி, தமிழ்நாட்டில் எலக்ஷன்னாலும் சரி இனிமேல் தளபதிதான் தளபதி மட்டும்தான்’’ என்று அச்சிடப்பட்டு இருந்தது.
அதுமட்டுமில்லாமல் ‘‘மத்திய அரசு, மாநில அரசியலை பார்த்தாச்சு… எப்போது மக்கள் இயக்க அரசியல்…’’ என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இது மாதிரி அரசியல் சார்புடன் விஜய் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டியிருந்த போஸ்டர்களை காவல் துறையினர் உடனடியாக கிழித்து அப்புறப்படுத்தினர்.
ஏற்கனவே நடிகர் விஜய் பேசிய அரசியல் பேச்சால் பட வெளியீட்டில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திய பின்னர் தயாரிப்பாளர்கள் மூலமாக சுமூகமாக தீர்க்கபட்டது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் மூலம் மீண்டும் அவருக்கு தலைவலி ஆரம்பித்து விட்டது.