கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதியவர்களை குணப்படுத்துவது சிரமமான காரியமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அவர்களையும் காக்கும் வகையில் தடுப்பூசியை பயன்படுத்த முயற்சித்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அதாவது காச நோய்க்கு பயன்படுத்தும் பிசிஜி என்ற தடுப்பூசியை முதியவர்களுக்கு வழங்கி தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரசை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு முயற்சிக்க போவதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதுகுறித்து இன்று விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது.
உலக அளவில் மருத்துவ துறையில் நடைபெறும் அனைத்து வகையான ஆராய்ச்சிகளிலும், தமிழகமும் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்குவதற்கான வசதியானது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டு தற்போது அது வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் கொரோனா பாதித்த நோயாளிகளிடம் செய்யப்படும் ரெட்மிசிவிர் என்ற மருந்து பரிசோதனையும் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. இதற்காக ஓமந்தூரார் மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்று உள்ளவர்களிடம் ரெட்மிசிவிர் மருந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான் ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் வழிகாட்டுதலின் படி முதியோர் மற்றும் பிற உடல்நல பாதிப்புள்ள மக்களுக்கு பிசிஜி தடுப்பூசி செலுத்தி அவர்களை காப்பாற்ற கூடிய முயற்சியை ஆரம்பித்துள்ளோம். தற்போது அந்த ஆய்வுக்கு அனுமதி கிடைத்துள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் அந்த சோதனை முயற்சிக்கான ஆராய்ச்சியை தமிழகத்தில் தொடங்க உள்ளோம். மேலும் இதுபோன்ற ஆய்வுகளுக்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுப்பதற்குக் காரணம் நாம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதால் தான்.
சென்னையில் 4 மருத்துவமனைகள், அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்டவைகளுடன் சேர்த்து 5 மருத்துவமனைகள் மற்றும் 5 மையங்களில் நோடல் அதிகாரிகளை நியமித்து, நோயாளிகள் காத்திருப்பு இல்லாத அளவிற்கு மருத்துவமனையில் அட்மிஷன் போட்டுவருகிறோம். மேலும் ஒரு வாரத்தில் கூடுதலாக 30 மருத்துவமனைகளை இதனுடன் இணைக்க உள்ளோம். இதற்காக ஒரு போர்ட்டலை ஆரம்பிக்கிறோம். அதில் ஒவ்வொரு மருத்துவமனையிலும் எவ்வளவு படுக்கை காலியாக உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்களை, ஆன்லைன் மூலமாகவே ஒவ்வொரு மருத்துவமனையும் செக் செய்து தெரிந்து கொள்ளலாம். பொதுமக்களும் கூட இதை பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலமாக எந்த மருத்துவமனையில் இடம் காலியாக இருக்கிறதோ அந்த மருத்துவமனைக்கு அவர்கள் செல்ல முடியும்.
முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தற்போது வரை ஒரு கோடியே 58 இலட்சம் அட்டைகள் உள்ளன. அந்த காப்பீடு அட்டை மூலமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான வழி வகைகளை தமிழக முதல்வர் செய்துள்ளார். மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் வராத 23 சதவீத மக்களுக்குதான் தனியார் மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளோம். ஐசிஎம்ஆர் அறிவித்த உத்தரவுப்படி, தனியார் ஆய்வகங்களில், கொரோனா பரிசோதனை கட்டணமானது 4500, ஆனால் நாங்கள் அதை ரூ.3000 என்ற அளவுக்கு குறைத்துள்ளோம் என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பிசிஜி தடுப்பூசி என்பது, காச நோய் என்று அழைக்கக்கூடிய டிபிக்கான மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதை முதியோர் மற்றும், கிட்னி, இதயம், அதிக நீரிழிவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு, போடப்பட்டு, கொரோனா வராமல் தடுக்க முடியும் என்று ஐசிஎம்ஆர் நம்புகிறது. இதை தான் தமிழகம் முன்னெடுக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.