சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக! விருப்ப மனு அளிக்க அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக! விருப்ப மனு அளிக்க அறிவிப்பு

விரைவில் நடைபெறவுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னதாக நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறுவதற்கான தேதியை பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஏற்கனவே அறிவித்துள்ளன. மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகளும் அறிவித்து விட்டன. மேலும் சில கட்சிகள் அதிமுக அல்லது திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருப்பதால், தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகே விருப்ப மனுக்களை பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.

இதன் அடிப்படையில் தான் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்குள் தொகுதிகளை உறுதி செய்து விட்டு, அதன்பின்னர் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என பொறுமையாக காத்திருக்கின்றன. அதே நேரத்தில் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட தேமுதிக கடந்த முறை போலவே இந்தத் தேர்தலிலும் அதிமுக, திமுக என இருதரப்பிலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்தி வருவதாக கூறப்பட்டு வருகிறது. இப்படி தேர்தல் நேரத்தில் இரண்டு கட்சிகளுடனும் மாறி மாறி பேச்சு வார்த்தை நடத்தி வருவதால் அக்கட்சியின் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். எனவே, அவர்களை திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக, அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அடிக்கடி புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
vijayakanth-updatenews360

அந்த வகையில் 2006 இல் தேமுதிக ஆரம்பித்த போது இருந்த ஆதரவு தற்போது இருக்கிறதா..? என்பதை கூட அறியாமல், தனித்து போட்டியிடவும் தயாராக இருப்பதாக அடிக்கடி அவர் கூறி வருவது தேமுதிக தொண்டர்களை மேலும் அதிருப்தி அடைய செய்துள்ளது. மேலும் இவரின்  மோசமான அணுகுமுறையினால் அதிமுக மற்றும் திமுக என இரு கட்சிகளும் தங்களை ஓரங்கட்டும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டதாக பிரேமலதா மற்றும் சுதீஷ் மீது அவர்கள் அதிருப்தியை நேரடியாகவே தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 25 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் சட்டமன்ற தேர்தல் விருப்பமனுக்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் 25ம் தேதி முதல் 05ம் தேதி வரை காலை 10 மணியிலிருந்து மாலை 5 வரை விருப்பமனுக்களை பெற்றுக்கொண்டு, பூர்த்தி செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாகவும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தமிழ்நாடு சட்டமன்ற தனி தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற தனி தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூபாய் 5 ஆயிரம் செலுத்தி விருப்பமனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.
Vijayakanth - updatenews360

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், தேர்தல் பனி குழு செயலாளர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்டம், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளைக் கழக நிர்வாகிளும், சார்பு அணி நிர்வாகிகளும் மற்றும் கழகத் தொண்டர்களும் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாம் மாபெரும் வெற்றியடைய பாடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் யாருடைய தயவும் இல்லாமல் தனித்து போட்டியிடுவது கட்சியின் தலைமைக்கு கௌரவமாக இருந்தாலும், தற்போதை கட்சியின் நிலையை புரிந்து தலைமை செயல்பட வேண்டும் என்பதே பல தேமுதிக தொண்டர்களின் சொல்ல முடியாத கோரிக்கையாக இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment