செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள சுற்றுலா தலமான மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு என்ற கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் வழக்கம் போல அப்பகுதியிலுள்ள மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது கடலில் மிதந்து வந்து கொண்டிருந்த ஒரு டிரம் கரை ஒதுங்கியுள்ளது. சாதாரண டிரம் தானே என எண்ணிய அந்த மீனவர்கள் அதனை திறந்து பார்த்துள்ளனர். மீனவர்கள் திறந்து பார்த்த அந்த டிரம்மில் 78 பொட்டலங்கள உள்ளதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து அந்த மீனவர்கள் அருகிலுள்ள காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் அளித்த அந்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் அந்த டிரம்மை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து அந்த டிரம்மை சோதனை செய்ததில், உள்ளே இருந்த அந்த பொட்டலங்கள் அனைத்தின் அட்டை படத்திலும் ரீபைன்ட் சைனீஸ் டீ என்று சீன மொழியிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருந்துள்ளது. இது குறித்து சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பொட்டலங்களை சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பரிசோதனையின் முடிவில், பொட்டலங்களில் இருந்தது ஹெராயின் போதை பொருள் வகையை சேர்ந்த மெத்தாம்பிடைமின் என்ற போதை பொருள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அதன் சர்வதேச சந்தை மதிப்பானது ரூ.230 கோடி என்பதும் இந்த பரிசோதனையின் போது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இதை யார் யாருக்காக அனுப்பினார்கள் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக இளைஞர்களை குறி வைத்து இந்த போதை பொருட்களை சீனா அனுப்பியதா என்ற கோணத்திலும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.