டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு அரசே பொறுப்பு! உச்ச நீதிமன்றம் அதிரடி
தலைநகரான டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை ஏற்பட்டு தற்போது அது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இதற்கு அரசை நிச்சயம் பொறுப்பாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
டெல்லியில் ஏற்பட்டுள்ள இந்த காற்று மாசுபாடு அங்குள்ள கோடி கணக்கான மக்களின் வாழ்வா சாவா விவகாரம். இங்கு வசித்து வரும் இந்த மக்கள் கடுமையான காற்று மாசுபாட்டின் பலன்களை அனுபவித்து வருகின்றனர், இதற்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த விஷயத்தில் கேள்வி எழுப்பும் போது, “மக்கள் இது போன்று மடிய நாம் அனுமதிக்க முடியுமா? நாடு 100 ஆண்டுகளுக்குப் பின்னால் செல்வதை அனுமதிக்க முடியுமா?
நாம் அரசை இதற்குப் பொறுப்பாக்க வேண்டும். ஏன் அரசு எந்திரம் சுள்ளிகளைப் போட்டு எரிக்கும் செயலை தடுத்து நிறுத்த முடியவில்லை? என்றும் கேள்வி எழுப்பினார்.
மாநில அரசுகள் மக்கள் நல அரசு என்ற கருத்தாகத்தை மறந்து விட்டன. ஏழை மக்கள் பற்றி அரசுகள் கவலைப்படுவதில்லை, இது துரதிர்ஷ்டமானது. நாட்டின் ஜனநாயக அரசு சுள்ளிகள் எரிப்பு விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு மாசுபாட்டைத் தடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், இது கோடி மக்களின் வாழ்வா சாவா விவகாரம். நாம் அரசை இதற்குப் பொறுப்பாக்க வேண்டும்” என்றார்.
மேலும் இந்த அமர்வின் இன்னொரு நீதிபதியாக தீபக் குப்தா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.