முக கவசம் கட்டாயம் அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து பல உயிர்கள் பலியாகியது, இந்த நோய் தொற்றின் காரணமாக செய்வதறியாது மத்திய மாநில அரசுகள் திகைத்து நின்ற நிலையில், மருத்துவ துறை அதிகாரிகள் கூறிய அறிவுரையின் பேரில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.
மத்திய அரசு கூறியதன் பேரில் மாநில அரசுகள் பொது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற கூறியது,மேலும் தொற்று பரவாமல் இருக்க நோய் தடுப்பு மருந்துகள் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தியதன் பலனாக கொரோனா பரவல் குறைய தொடங்கியது.
கொரோனா பரவல் குறைந்தாலும் அவ்வப்போது பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர், இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கியது, தற்போது நாள் ஒன்றுக்கு 3000 த்துக்கும் அதிகமான பாதிப்புகள் நாடு முழுவதும் பரவி வருவதால் மத்திய அரசு மாநில அரசுகளை நோய் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகையில், கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் நோய் தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, எனவே அரசு அறிவிக்கின்ற நோய் தடுப்பு விதிகளை கடைபிடித்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.