கோவை தேர்தல் முடிவுக்கு தடை கோரிய வழக்கு!! தள்ளுபடி செய்து நீதிமன்றம் அதிரடி!!
மக்களவை தேர்தலில் கோவை தொகுதிக்கான தேர்தல் முடிவை தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் அதிரடியாக மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
லண்டனில் வசித்து வந்த கோவை நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்த மருத்துவர் சுதந்திரக் கண்ணன் நடப்பு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டி லண்டனில் இருந்து கலைக்கு வந்துள்ளார். பல செலவுகள் செய்து வாக்களிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக வந்த சுதந்திரக் கண்ணன் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது அவருடைய பெயர் மட்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவரால் நினைத்தபடி நாடளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனது. இதே போல கோவை தொகுதியில் பல பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
இதையடுத்து தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரே தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலமாக சுதந்திரக் கண்ணன் அவர்கள் புகார் அளித்த நிலையில் தேர்தல் ஆணையம் எந்தவொரு பதிலையும் சொல்லவில்லை. இதையடுத்து சுதந்திரக் கண்ணன் அவர்கள் “கோவை தொகுதியில் என்னை போல எங்கள் தொகுதியில் பல பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் அவர்களால் வாக்களிக்க முடியவில்லை.
இதனால் எங்களுடைய பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்து நாங்கள் வாக்களிக்கும் வரை கோவை தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது” என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று(ஏப்ரல்30) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் “கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர்கள் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அப்பொழுதே நீங்கள் ஆட்சேபனை தெரிவித்திருக்க வேண்டும். வாக்குப்பதிவு முடிந்த பின்னர் இவ்வாறு வழக்கு தொடர்வது நியாயமற்றது.
தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தலின் முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு போட முடியாது. எனவே இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கின்றது” என்று கூறி மருத்துவர் சுதந்திரக் கண்ணன் அவர்கள் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்தது.