டாப் 10 பிரபல தமிழ் இயக்குநர்களின் திருமண வாழ்க்கை குறித்த விவரம்!!
தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் பல வெற்றிப் படங்களை கொடுத்து அடுத்த கட்ட லெவலுக்கு தங்களை உயர்த்தி வருகின்றனர்.இவர்களில் சில இயக்குநர்கள் திரையுலகில் மட்டுமல்லாமல் தங்களது திருமண வாழ்விலும் ஜொலித்து வருகின்றனர்.இவர்களில் டாப் 10 பிரபல இயக்குனர்கள் யாரை திருமணம் செய்து கொண்டனர்,அவர்களின் பிள்ளைகளின் விவரம் இதோ.
1.பாரதிராஜா
‘இயக்குனர் இமயம்’ என்று புகழப்படும் பாரதிராஜா அவர்கள் தமிழ் திரையுலகில் ஒரு புகழ்பெற்ற இயக்குனர்,தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.இவர் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மூன்று மொழிகளில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி வெற்றியடைய செய்திருக்கிறார்.
இவர் 1975 ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமாகி சிவப்பு ரோஜாக்கள்,அலைகள் ஓய்வதில்லை,மண் வாசனை,முதல் மரியாதை,கடலோர கவிதைகள் உள்ளிட்ட பல கிராமப்புற படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.1980,1990 காலகட்டங்களில் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.இவர் ‘சந்திர லீலாவதி’ என்பவரைத் திருமணம் செய்துகொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ‘மனோஜ்’ என்ற மகனும்,‘ஜனனி’ என்ற மகளும் உள்ளார்.
2.பாக்யராஜ்
தமிழ் திரையுலகில் 80களில் கொடிகட்டி பறந்த இயக்குநர்களில் ஒருவர்.இவர் நடிப்பைத் தாண்டி வசன எழுத்தாளர்,திரைக்கதை அமைப்பாளர்,இயக்குநர்,தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ஒரு கலைஞர் ஆவார்.
1975 ஆம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ அதனை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில்,சிகப்பு ரோஜாக்கள் போன்ற திரைப்படங்களில் பாரதிராஜா அவர்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார்.பின்னர் ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தின் மூலம் இயக்குநரானார்.இப்படி தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்த பாக்யராஜ் கடந்த 1981 ஆம் ஆண்டு பிரவீனா என்ற நடிகையை திருமணம் செய்தார்.ஆனால் எதிர்பாராத விதமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு பிரவீனா 1983 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.பின்னர் பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை 1984 ஆம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு சரண்யா என்ற மகளும்,சாந்தனு என்ற மகனும் இருக்கிறார்.
3.மணிரத்னம்
இவர் கடந்த 1983 அம் ஆண்டு வெளியான ‘பல்லவி அனுபல்லவி’ திரைப்படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார்.
பின்னர் பாம்பே,திருடா திருடா என பல வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபல இயக்குநரானார்.இவர் நடிகை,திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குநராக உள்ள சுஹாசினி அவர்களை கடந்த 1988 ஆம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு நந்தன் என்ற மகன் உள்ளார்.
4.சேரன்
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘புரியாத புதிர்’ என்ற திரைப்படத்தில் உதவி இயக்குநராக அறிமுகமான இவர் சேரன் பாண்டியன்,நாட்டாமை போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
பின்னர் ‘பாரதி கண்ணம்மா’ என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராக திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து வெற்றி கொடி கட்டு,
ஆட்டோக்ராப்,தவமாய் தவமிருந்து,ஆடும் கூத்து உள்ளிட்ட தரமான படங்களை இயக்கி தேசிய விருது பெற்றார்.இவர் செல்வராணி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இத்தம்பதிக்கு தாமினி,நிவேதா பிரியதர்ஷினி என்ற இரு மகள்கள் உள்ளனர்.
5.சுந்தர.சி
மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான ‘முறை மாமன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.பொதுவாக சுந்தர்.சி படங்கள் என்றால் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்ற கருத்து பரவலாக நிலவி வருகிறது.இயக்குநராக பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பு அவர்களை கடந்த 2000 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.இந்த நட்சத்திர தம்பதியினருக்கு அவந்திகா மற்றும் ஆனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்
6.கே.எஸ்.ரவிக்குமார்
தமிழில் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் நாட்டாமை,நட்புக்காக, அவ்வை சண்முகி,தெனாலி,படையப்பா,முத்து,வில்லன்,வரலாறு,தசாவதாரம் என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இவர் இயக்கிய படங்கள் கதை மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.இவர் கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு மல்லிகா,ஜனனி,மோனிஷா என மூன்று மகள்கள் உள்ளனர்.
7.சங்கர்
பெரிய பட்ஜெட் படங்களை இயக்குவதில் பெயர் பெற்ற இவர் ஆரம்ப காலங்களில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.பின்னர் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான ‘ஜென்டில் மேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இதன் பிறகு ஜீன்ஸ்,இந்தியன்,அந்நியன்,சிவாஜி,எந்திரன்,ஐ போன்ற பல தரமான படங்களை வழங்கினார்.இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு அர்ஜித் என்ற மகனும்,ஐஸ்வர்யா மற்றும் அதிதி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
8.செல்வராகவன்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன்.இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து காதல் கொண்டேன்,7ஜி ரெயின்போ காலனி,புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்,மயக்கம் என்ன,இரண்டாம் உலகம்,என்ஜிகே,நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி இருக்கிறார்.முதலில் இவர் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்தார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து பெற்று விட்டனர்.இதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார்,ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
9.வெங்கட் பிரபு
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெங்கட் பிரபு.இவர் இயக்குநரும் இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மகன் ஆவார்.ஆரம்ப காலங்களில் குணச்சித்திர நடிகராக இருந்த இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 600028’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன் பின் மங்காத்தா,மாநாடு உள்ளிட்ட வெற்றி படங்களை வழங்கினார்.தற்பொழுது நடிகர் விஜய் அவர்களை வைத்து புதிய படம் இயக்க இருக்கிறார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு நடன ஆசிரியர் கே.ஜே.சரசாவின் மகள் ராஜலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு சிவானி என்ற மகள் இருக்கிறார்.
10.விக்னேஷ் சிவன்
இவர் தமிழ் திரைப்பட இயக்குநர்,பாடகர்,பாடலாசிரியர்,நடிகர் ஆவார்.இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ‘போடா போடி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இதையடுத்து நானும் ரவுடிதான்,காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கி இருக்கிறார்.இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகை நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார்.இந்த தம்பதிக்கு உயிர் ருத்ரோநீல் N சிவன்,உலக் தெய்விக் N சிவன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.