திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? தமிழக காங்கிரஸ் கட்சியினர் சோனியாவை சந்திக்க முடிவு?
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இணைந்து போராடி வருகின்றனர். இதன் மூலமாக வருகின்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளுக்கும் நல்ல செல்வாக்கு உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் பொய்யாக்கும் வகையில் தற்போதைய நிலவரம் சென்று கொண்டிருக்கிறது அதாவது திமுக சார்பாக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு தான் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதுமுள்ள 17 மாநிலங்களிலுள்ள காலியான 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் சார்பாக 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதில் திமுகவின் சார்பாக 3 உறுப்பினர்களும் அதிமுகவின் சார்பாக 3 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதனையடுத்து திமுகவிற்கான இடத்திற்காக நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலில் அக்கட்சியின் சார்பாக மூன்று பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் யார் யார் என்ற அறிவிப்பு திமுக தலைமை அறிவித்தது. அதில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ உள்ளிட்டோர் மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் என திமுக சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக கூறி போராடி வந்துள்ள இந்நிலையில் திமுக மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் பதவியை சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் என்று திமுகவில் இருக்கும் சிறுபான்மையினர் எதிர்பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தலைமை கடந்த மக்களவை தேர்தலில் படு தோல்வியடைந்த கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்பெற கொங்கு மண்டலத்தை சேர்ந்த அந்தியூர் செல்வராஜ்க்கு வாய்ப்பை வழங்கியது என்றும் கூறுகின்றனர். இதைப்போலவே திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியும் திமுகவிடம் இருந்து ஒரு மாநிலங்களவை சீட் கேட்டு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்காமல் அவர்களே எடுத்து கொண்டுள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திஉள்ளிட்டோரிடம் பேசலாம் என்று தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமுக மீது காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இத்துடன் முடியாமல்வருகின்ற அடுத்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சிக்காக கூடுதல் சீட்டுகளை கேட்கவும் தமிழக காங்கிரஸ் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ இந்த மாநிலங்களவை தேர்தல் இரு கட்சிகளுக்கிடையே விரிசலை உண்டாக்க ஆரம்பித்து விட்டது.