இந்த ஆண்டிற்கான உலக அளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக, டெல்லியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டி ஒருவர் இடம் பிடித்துள்ளார்.
ஆண்டுதோறும் உலக அளவில் பல்வேறு துறைகளில் செல்வாக்கு மிகுந்து விளங்கும் 100 நபர்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது. இதன் அடிப்படையில், இந்த ஆண்டிற்கான பிரபலங்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இந்திய பிரதமர் மோடி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.
கடந்த 2014, 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளை தொடர்ந்து, இந்த ஆண்டிலும் பிரதமர் மோடியின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞர்கள் சம்பந்தமான பட்டியலில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா இடம் பிடித்துள்ளார்.
இவர்களை போலவே, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, உலகிலேயே முதல் எச்.ஐ.வி. நோயாளியைக் குணப்படுத்திய பேராசிரியர் ரவீந்திர குப்தா, அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன், துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், ஜெர்மன் அதிபர் அஞ்சலோ மெர்க்கல், விண்வெளி வீரர் கிறிஸ்டினோ கோச் மற்றும் ஜெசிகா மெய் உள்ளிட்டோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் இடம்பெற்ற இவ்வளவு பிரபலங்களுக்கு மத்தியில் இந்தியாவின் டெல்லியைச் சேர்ந்த 82 வயது மூதாட்டியான பில்கிஸ் பெயரும் டைம்ஸ் பத்திரிக்கையின் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் முன்னணியில் இருந்த பெண்களில் ஒருவர் தான் இந்த பில்கிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.