பாஜகவிற்கு தாவும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள்! கலக்கத்தில் அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி முதல்வரான ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசில் கடந்த காலத்தில் அமைச்சராக பதவி வகித்தவர் தான் கபில் மிஸ்ரா. கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதத்தில் தனது அமைச்சரவையிலிருந்து கபில் மிஸ்ராவை கெஜ்ரிவால் வெளியேற்றினார். அமைச்சரவையிலிருந்து வெளியேறியது முதல் அரவிந்த் கெஜ்ரிவாலை கபில் மிஸ்ரா தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில்அவர் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக கூறி, டெல்லி சட்டப் பேரவை தலைவர் ராம் நிவாஸ் கோயல் அவரை தற்போது வகித்து வரும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தார்.
இந்த பதவி நீக்கத்தை எதிர்த்து கபில் மிஸ்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கபில் மிஸ்ரா அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். கடந்த சில மாதங்களாக கபில் மிஸ்ரா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வாரே இருந்தது. இவர் பாஜகவில் இணைந்துள்ள இந்நிலையில் அவரை பற்றி அவ்வாறு வெளிவந்த தகவல்கள் தற்போது உண்மையாகி விட்டது.
கபில் மிஸ்ரா பா.ஜ.வில் இணைந்து குறித்து ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது: கபில் மிஸ்ரா தனது முகத்திரையை கழற்றியதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதுவரை பாஜக தயாரித்து மற்றும் இயக்கிய நாடகங்களை அவர் நடத்தியுள்ளார் என்பதை நாங்கள் இதன் மூலமாக நிரூபணம் செய்துள்ளோம். இதுதான் பாஜகவின் அரசியல் டிரேட் மார்க். இது இந்திய அரசியலுக்கு புதிய இயல்பு.
கபில் மிஸ்ரா அமைச்சராக இருந்த போது டெல்லி ஜல் வாரியத்தில் அவர் மீது 3 குற்றச்சாட்டுகள் இருந்தன. டெல்லி மாநகராட்சி தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி வாய்ப்புகளை நாசப்படுத்த அவர் முயற்சி செய்தார். அவர் பாஜக ஏஜெண்டாக செயல்படுகிறார் என எங்களுக்கு ஏற்கனவே தகவல் கிடைத்தது.
மேலும், ஆம் ஆத்மி தலைவர் ரிச்சா பாண்டே பாஜகவுக்கு சென்றது குறித்து கூறுகையில், கட்சி அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை துரதிருஷ்டவசமாக உடைத்து விட்டார். அவர் எங்கு சென்றாலும் அவருக்கு நல்ல அமைதியான வாழ்க்கை கிடைப்பதற்கு எங்களது வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் பாஜகவின் பக்கம் சாய்வதால் அந்த கட்சிக்குள் உள்ளுக்குள் கொஞ்சம் கலக்கமாக தான் உள்ளது என்கிறார்கள். மேலும் கட்சியில் பலர் அதிருப்தி நிலையில் இருப்பதும் ஆம் ஆத்மிக்கு கொஞ்சம் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து இவ்வாறு முக்கிய தலைவர்கள் வெளியேறுவதால் அடுத்து யார் வெளியேறுவார்கள் என்று எண்ணி அரவிந்த் கேஜ்ரிவால் கலக்கத்தில் இருப்பதாவும் கூறப்படுகிறது