நீங்களும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகனுமா? இதோ சிவில் தேர்வுக்கான தமிழக அரசின் இலவசப்பயிற்சி
ஒவ்வொருவரும் படித்து முடித்த பின்பு எவ்வாறாவது ஒரு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று தீவிரமாக தேடி கொண்டிருப்போம். அதிலும் பெரும்பாலோனோர் எப்படியாவது அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்று அதற்காக தீவிரமான பயிற்சியில் ஈட்டுபட்டிருப்பார்கள். அப்படி அரசு தேர்வுக்கு தயாராகும் பெரும்பாலான மாணவர்களின் நோக்கம் இந்தியாவின் உயரிய அரசு பணியான ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பதே.இதற்காக பெரும்பாலோனோர் பெரிய அளவில் பணம் செலவழித்து பயிற்சி மையம் செல்ல முடியாத சூழலில் இருப்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு இலவசமாக இந்த பயிற்சியை வழங்கி வருகிறது.
இதற்காக சென்னையில், மத்திய அரசால் நடத்தப்படும் ஆட்சிப்பணி தேர்வான சிவில் தேர்வில் முதல்நிலை தேர்வுக்கான முழு நேர பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு இலவசமாக வழங்க உள்ளதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 16-ம் தேதி.
மத்திய அரசின் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) நடத்தும் இந்திய குடிமைப் பணிகளுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் தேர்வில் 2020-ம் ஆண்டுக்கான தேர்வுக்கான முதல் நிலை தேர்வுக்காக மாணவர்களுக்கு தமிழக அரசு நடத்தும் பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு கடந்த வாரம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
முதல் நிலைத்தேர்வு, முதன்மைத்தேர்வு, நேர்முகத்தேர்வு என மூன்றுக்கட்டங்களாக நடக்கும் ஆட்சிப்பணித்தேர்வின் முதல் கட்டமான முதல் நிலைத்தேர்வுக்கான பயிற்சி தற்போது வழங்கப்பட உள்ளது.
இலவச பயிற்சியில் சேர்வது எப்படி:
தமிழக அரசு வழங்கும் இந்த இலவச பயிற்சியில் சேர விருப்பம் உடையவர்கள் பயிற்சி மையத்தின் அதிகாரப்பூர்வமான இணைய தளமான http://www.civilservicecoaching.com சென்று விண்ணப்பிக்கவேண்டும். மேலும் இந்த இலவச பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 16-ம் தேதி ஆகும்.பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு தகுதியுடையவர்கள் நுழைவு தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.நுழைவு தேர்வின் அடிப்படையில் இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இவ்வாறாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சென்னையில் உள்ள தேர்வாணைய பயிற்சி மையத்தில் 6 மாத காலம் இலவச தங்குமிடம், உணவுடன் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி காலத்தில் முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் அனுபவம் உள்ள ஆளுமைகள் மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சியை அளிப்பார்கள்.
இலவச பயிற்சியில் இணைய தேவையான கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்லூரிகளிலிருந்து இளநிலைப் பட்டம் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது அடுத்த ஆண்டு ஆக.1-ம் தேதி அன்று, அனைத்து வகுப்பினருக்கும் குறைந்தபட்ச வயது 21-ஆக இருக்கவேண்டும்.
வயது வரம்பு: இதர வகுப்பினர் 32 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் 37 வயதுக்கு மிகாமலும்
பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர்கள் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் 42 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பகுதிநேரப் பயிற்சியும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் முழு நேரமும், வார நாட்களில் மாலை 6.30 மணி முதல் 8.30 மணிவரை சிறப்பு வகுப்புகளும் நடைபெறும்.
தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்.16 ஆகும் , பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு அக்டோபர் 13-ம் தேதி நடக்கிறது.
பயிற்சிக்கட்டணம்
பயிற்சி காலம் முழுவதும் முற்பட்ட வகுப்பினருக்கு ஆயிரம் ரூபாயும்,மற்றப் பிரிவினருக்கு எந்தக் கட்டணமும் இல்லை.விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு விடுதிக் கட்டணமும் உணவுகளும் இலவசமாக வழங்கப்படும்.மேலும் பகுதி நேர பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் அளிக்கப்படாது.ஆனால், பயிற்சி நேரத்தில் உணவுகள் இலவசமாக வழங்கப்படும். அனைத்துப் பயிற்சியாளர்கள் காப்புத் தொகையாக மூன்றாயிரம் செலுத்த வேண்டும்.
பயிற்சிக்கான மொத்த இடங்கள்:
விடுதியில் தங்கி பயிற்சிப்பெற 225 பேருக்கு அனுமதி உள்ளது. அவர்களுக்கு பயிற்சி காலத்தில் தங்குமிடம், உணவு இலவசம். இதில் வகுப்புவாரியாக தாழ்த்தப்பட்டோர் 110 இடங்கள் (ஆதிதிராவிடர் 92, அருந்ததியர் 18), பழங்குடியினர் 3 , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 40, பிற்படுத்தப்பட்டோர் 54, பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர் -7, முற்பட்ட வகுப்பினர் -4 என மொத்தம் 225 பேர்.
பகுதி நேர வகுப்பில் சேருவோருக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் 100. இதில் தாழ்த்தப்பட்டோர் -49 (ஆதிதிராவிடர் -41, அருந்ததியர் – 8), பழங்குடியினர் -1, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் – 18, பிற்படுத்தப்பட்டோர் – 24, பிற்படுத்தப்பட்டோர்-இஸ்லாமியர் -3 , மாற்றுத்திறனாளிகள் -3, முற்பட்ட வகுப்பினர் -2
ஐஏஎஸ் ஐபிஎஸ் பணிக்கான சிவில் தேர்வு எழுத ஆர்வம் உள்ள ஏழை வசதி குறைந்த மாணவர்கள் தமிழக அரசு வழங்கும் இந்த இலவச வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.