அன்புமணி ராமதாஸ் கைது!! போர்க்களமாக மாறிய போராட்டக்களம்!!
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்திருக்கும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணியை அந்நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி நேற்று முன் தினம் காலை தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சேத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, ஆதனூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும் தாங்கள் பயிரிட்டுள்ள நெற்பயிர்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் அதனை அழித்து கால்வாய் வெட்டிய அந்நிறுவனத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் என்எல்சி நிர்வாகத்தின் இந்த அடாவடி நடவடிக்கையை கண்டித்து விவசாயிகளுக்கு ஆதரவாக முற்றுகை போராட்டமானது இன்று நடத்தப்படும் ,மேலும் சுற்றுச்சூழல் விவகாரத்தில் ஆர்வம் உள்ள அனைத்து அமைப்புகளும் பங்கேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
மேலும் அன்புமணி அவர்களின் முற்றுகை போராட்ட எதிரொலியால் கடலூர் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் நிர்வாகம் கடைகளை மாலை 6 மணி வரை திறக்க வேண்டாம் என உத்தரவிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் அவர்களின் அழைப்பை ஏற்கும் வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பாமக தொண்டர்கள்,விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.என்எல்சி யின் நுழைவையில் முன்பு நடந்து கொண்டிருந்த
போராட்டத்தை தீவிரப்படுத்துவதற்காக என்.எல் .சி.குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்குமிடையே வாக்குவாதம் முற்றியது.
இதனால் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் முயற்சியாக அன்புமணி ராமதாஸ் அவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனால் போராட்டம் தீவிரமான நிலையில் காவலர்கள் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை கலைக்கும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில் போராட்டக்களம் போர்க்களமாக மாறியதால் நெய்வேலியில் பதற்றம் நிலவுகிறது.