சிலை வைத்து தன்னை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்டாரா? உயர் நீதிமன்ற நீதிபதி காட்டம்!!
வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது.இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர்,ஈரோடு, திருப்பூர்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.இதனால் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டி காவல்துறைக்கும் மாநில அரசுக்கும் உத்தரவிட வேண்டுமென்றும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்னிலையில் வந்தது.தமிழக அரசு மற்றும் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன்,தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில் சிலைகள் வைப்பதற்கான இடங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.கடந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் வைக்க அனுமதி வழங்கப்படும்.அதுமட்டுமல்லாமல் அந்தந்த பகுதியில் உள்ள சட்ட ஒழுங்கு நிலைப்பாடு பொறுத்து, சிலை வைக்க அனுமதி கோரிய மனுக்களை பரிசீலித்து முடிவெடுக்க உள்ளூர் காவல்துறையினருக்கு டிஜிபி அறிவுறுத்தியுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு வழங்கினார்.அதில் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தால் அந்த மனு ஏற்கப்படாது.சிலை வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கேட்டாரா? இந்த விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்வதால் பொதுமக்களுக்கு என்ன பயன்? விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாக கூறிய நீதிபதி,இந்த வழக்கில் தான் பதிவு செய்த கருத்துகள் அனைத்தும் தனது சொந்த கருத்துகள் மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.