தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை குறைப்பது தான் திட்டம்-அமித் ஷா
புதுடெல்லி
அனைத்து துறைகளைப் பற்றியும் மக்கள் கேட்கும் அணைத்து கேள்விகளுக்கும் அதிகபட்சமான தகவல்களை வழங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களை குறைப்பது தான் மத்திய அரசின் திட்டம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று மத்திய தகவல் ஆணையத்தின் 14-வது ஆண்டு மாநாடு நடந்தது. இதில் பாஜக தேசியத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா பங்கேற்றார். அதில் அமித் ஷா அவர்கள் பேசியதாவது:
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்களைக் குறைப்பதுதான் மத்திய அரசின் திட்டம். அதற்கு ஒரேவழி அனைத்து துறைகள் தொடர்பான விவரங்களையும், தகவல்களையும் முன்கூட்டியே, போதுமான அளவில் மக்களுக்கு கொடுத்து விட்டால், ஆர்டிஐ மூலமாக மனுக்கள் வருவதை தவிர்த்து விடலாம்.
மக்களுக்கு அதிகபட்ச விவரங்கள் கிடைப்பதற்கான பல்வேறு வழிகளையும் மத்திய அரசு எடுப்பதன் மூலமாக, ஆர்டிஐ மனுக்கள் வருவதை குறைக்க முடியும். ஆர்டிஐ மூலம் தான் தகவல்களைப் பெற முடியும் என்ற மக்களின் மனநிலையை மாற்றி அவர்களுக்கு அதைவிட எளிதாக தகவல்களை கிடைக்கச் செய்வதே நமது நோக்கம்.
மத்திய அரசின் அனைத்து விதமான நிர்வாக முறைகளையும் போதுமான அளவு வெளிப்படைத்தன்மை உள்ளதாக மாற்றி, மக்கள் இது குறித்து ஆர்டிஐ மனுக்கள் தாக்கல் செய்யும் அளவை குறைக்க வேண்டும். அரசின் நிர்வாக முறை ஒழுக்கமான தடத்தில் சென்று கொண்டிருந்தால், ஆர்டிஐ மனுக்கள் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
அதே சமயம், மக்களுக்கும், அரசுக்கும் இடையிலான இடைவெளியை இணைக்கும் பாலம் ஆர்டிஐ மனு மட்டும் என்பதால் அதற்கு இது அவசியமானதும் தான்.
ஆர்டிஐ மனுக்கள் தாக்கல் செய்யாமலே தகவல்களை பெறும் முறையை அறிமுகம் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை செய்து வருகிறது. அதாவது, பல்வேறு திட்டங்கள் குறித்த விவரங்களை ஆன்-லைன் மூலம் வழங்கிவிட்டால் மக்கள் அதை ஆர்டிஐ மனுக்கள் தாக்கல் செய்யாமல் ஆன்-லைனில் பார்க்க முடியும்.
இப்போது ஆர்டிஐ மனுக்கள் இல்லாமல் மக்களுக்கு தேவையான தகவல்களை கிடைக்கச் செய்யும் தொழில்நுட்பத்தில் இரு அடி எடுத்து வைத்துள்ளோம்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து 2.5 கோடி ஆர்டிஐ மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. அதேசமயம் மக்கள் ஆர்டிஐ மனுக்களை தவறாக கையாள்வதையும் குறைக்க வேண்டும்.
மத்திய தகவல் ஆணையம், மாநில தகவல் ஆணையம், அவர்களின் 5 லட்சம் பணியாளர்கள் ஆகியோரின் உதவியுடன் ஒரு துறை குறித்த அடிமட்ட விவரங்களையும் மக்களுக்கு அளிக்கும் அளவிற்கு உலகில் உள்ள ஒரே நாடு இந்தியா மட்டும் தான்.
ஊழல் இல்லாத, சுதந்திரமான நிர்வாக அமைப்புக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நல்ல முயற்சியாகும். மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு சரியான சட்டமாகவும் இருக்கிறது என்றும் அமித் ஷா தெரிவித்தார்