ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமகவிற்கு செக்!
மறைந்த வன்னியர் சங்க தலைவரும்,பாமகவின் முக்கிய நிர்வாகியுமான காடுவெட்டி குருவின் சொந்த தொகுதியில் இந்த முறை பாமகவின் சார்பாக அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு போட்டியிடுகிறார்.பெண்கள் பாதுகாப்பு,மதுக்கடைகளை நீதி மன்றத்தின் மூலமாக மூடியது என இவரின் செயல்பாடுகள் அவருக்கு இந்த தொகுதியில் வெற்றியை தேடித் தரும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அக்கட்சிக்கு எதிராக மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார்.இது பாமகவினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வாழ்நாள் முழுவதும் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமகவின் ஆதரவாளராக இருந்த காடுவெட்டி குருவின் குடும்பத்தினர் இப்படி அந்த கட்சிக்கு எதிராகவே களமிறங்கி வேலை செய்வது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் குருவின் மனைவி மட்டும் பாமகவின் ஆதரவாளராக இருக்க மற்ற குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அக்கட்சிக்கு எதிராக பேசி வந்தனர்.தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவரது மகன் கணலரசன் திமுகவின் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.ஆனால் சில நாட்களிலேயே வன்னிய உள் ஒதுக்கீடு எதிர்ப்பு காரணமாக திமுக கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்றார்.
இதனையடுத்து பாமகவிற்கு ஆதரவாக செயல்படுவார் அல்லது இந்த தேர்தலில் அமைதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் பாமகவிற்கு எதிராக போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து இது குறித்து கூறியது, “குருவின் ஆதரவாளர்களும் வன்னியர் பெருமக்களும் இந்த தேர்தலில் தங்களது கட்சிக்கு மாபெரும் வெற்றியை தரவேண்டும்.நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.