Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி மட்டுமே விடுதி நடத்த அனுமதி பெற்றது! வெளியான அதிர்ச்சி தகவல்

கள்ளக்குறிச்சியில் ஒரு பள்ளி மட்டுமே விடுதி நடத்த அனுமதி பெற்றது! வெளியான அதிர்ச்சி தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 1 பள்ளி மட்டுமே விடுதி நடத்த முறையான உரிமம் பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மற்றும் அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரம் தமிழகத்தில் அதிர்வலையை உருவாக்கியுள்ளது.இந்த சம்பவம் குறித்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அந்தப் பள்ளியில் ஆய்வு செய்தது. அப்போது, கனியாமூர் தனியார் பள்ளியில் செயல்பட்டு வந்த விடுதிக்கு முறையான அனுமதி பெறவில்லை எனத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம், முறையாக உரிமம் பெறாமல் இயங்கி வரும் சிறார் மற்றும் மகளிருக்கான இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக உரிமம் பெறுதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், விடுதியுடன் 8 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், ஒரு பள்ளி மட்டுமே விதிமுறைகளுக்கு உட்பட்டு மாவட்ட குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையத்தில் முறையான அனுமதி பெற்றுள்ளது.

ஏற்கெனவே இரு பள்ளிகள் அனுமதி பெற விண்ணப்பித்திருந்த போதிலும், அவை முறையாக சான்றிதழ் இணைக்கவில்லை. கனியாமூர் பள்ளி சம்பவத்திற்குப் பின் இதர பள்ளி நிர்வாகங்கள், தற்போது எங்களை அணுகியுள்ளன என குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மைய அலுவலர் தெரிவித்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, “கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் இல்லங்கள் மற்றும் விடுதிகளை நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இல்லங்கள் மற்றும் விடுதிகள் பதிவு செய்தல் மற்றும் உரிமம் பெற, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும், தொலைபேசி எண். 04151-295098 மற்றும் “dswokallakurichi@gmail.com” மற்றும் “dcpukkr@gmail.com” என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதே போல விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளை வரும் 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மோகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.

விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தங்கும் விடுதிகளை நடத்திவருகின்றன. இதுதவிர குழந்தைகள், முதியோர் இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர்விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் சிலர் பதிவு செய்யாமலும், பதிவுகளை புதுப்பிக்காமலும் இயங்கிவருவதாக அவ்வப்போது புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே விடுதி நிர்வாகிகள்” https;//tnswp.com” என்ற இணையதளம் மூலமாக உரிய சான்றுகளுடன் தாங்கள் நடத்திவரும் விடுதிகளை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் போன்றவற்றை வரும் 31-ம் தேதிக்குள் மேற்கொள்ளவேண்டும்.

மேலும், இதனை கண்காணித்திட மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும். அவ்வாறு ஆய்வின்போது குறைபாடுகள் கண்டறியப்பட்டால் விடுதிகள் மற்றும் இல்லங்களை உடனடியாக மூடுவதற்குநடவடிக்கை மேற்கொள்ளப்படு வதோடு சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் மீது காவல்துறையின் மூலம் வழக்குப்பதிவு செய்து அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைதண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Comment