காஷ்மீரில் விரைவில் மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் சேவை தொடக்கம்
ஸ்ரீநகர்
காஷ்மீரில் வரும் 14 ஆம் தேதி முதல் மீண்டும் போஸ்ட் பெய்டு மொபைல் போன் சேவை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, அரசியலமைப்பு 370-வது பிரிவை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு திரும்பப் பெற்றது. இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, எம்.பி. பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தொலைத்தொடர்பு இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மேலும் நிலைமையை சமாளிக்க மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பியதும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.
அமைதி நிலவ தொடங்கியதால் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை படிப்படியாக விடுவிக்கும் நடவடிக்கையையும் காஷ்மீர் அரசு நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து காஷ்மீர் முழுவதும் லேண்ட் லைன் தொலைபேசி சேவை ஏற்கெனவே வழங்கப்பட்டு விட்டது.
இந்த நிலையில் நாளை மறுதினம் பிற்கபல் 12 மணி முதல் மாநிலம் முழுவதும் போஸ்ட் பெய்டு மொபைல் போன் சேவை முழுமையாக வழங்கப்படும் என அம்மாநில அரசு அறுிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில திட்டத்துறை முதன்மை செயலாளர் ரோஹித் கன்சல் கூறியதாவது:
காஷ்மீரில் முன்னெச்சரிக்கை கருதி மொபைல் போன் சேவை துண்டிக்கப்பட்டது. மாநிலத்தில் மொத்தம் 40 லட்சம் வாடிக்கையாளர்கள் போஸ்ட் பெய்டு மொபைல் போனும் மேலும் 26 லட்சம் பிரீ பெய்டு மொபைல் போன் இணைப்புகளும் உள்ளன.
நாளை மறுதினம் பிற்கபல் 12 மணி முதல் மாநிலம் முழுவதும் போஸ்ட் பெய்டு மொபைல் போன் சேவை முழுமையாக வழங்கப்படும். இதன் மூலம் 40 லட்சம் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள் பயன் பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.