Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

74 வயதில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த மூதாட்டி! கின்னஸ் சாதனை

74 வயதில் இரட்டை குழந்தையை பெற்றெடுத்த மூதாட்டி! கின்னஸ் சாதனை

ஆந்திராவில் 74 வயதான மூதாட்டி ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்து கின்னஸ் சாதனை செய்துள்ளார்.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தக்‌ஷராமம் என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜா ராவ். இவருக்கும் மங்கம்மா (74) என்பவருக்கும் 1962 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகியும் இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லாமல் இருந்தது.

இதனால்  ஒரு குழந்தையாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் நீண்டகாலமாக பல்வேறு மருத்துவர்களை அணுகி இவர்கள் சிகிச்சை பெற்றுவந்தனர். ஆனால் அந்த சிகிச்சைகளால் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

எனினும் முயற்சியை கைவிடாத மங்கம்மா தம்பதியினர் 2018 ஆம் ஆண்டு நவம்பரில் குண்டூரில் உள்ள அகல்யா மருத்துவமனைக்கு வந்தனர்.  மருத்துவமனையின் டாக்டர் ஷானக்கயலா அருணா இந்த சவாலான சாதனையை ஏற்றுக்கொண்டார்.

மங்கம்மாவின் உடல் நிலையை ஆய்வு செய்த மருத்துவர்கள் குழந்தை பெற்றெடுப்பதற்கான முழு உடல் தகுதி பெற்றிருப்பதை உணர்ந்தனர். இதையடுத்து, ஜனவரி மாதம் ஐவிஎஃப் மூலம் செயற்கை கருவூட்டல் நிகழ்த்தப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மங்கம்மா தனது 74-வது வயதில் சிசேரியன் முறையில் இரட்டை பெண் குழந்தைகளை இன்று பெற்றெடுத்திருக்கிறார். தாய் மற்றும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது 74-வது வயதில் இரட்டை  குழந்தைகளை பெற்றெடுத்ததன் மூலம் அதிக வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண் என்ற கின்னஸ் சாதனையை மங்கம்மா நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக 2006 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண் தன்னுடைய 66 வது வயதில் குழந்தை பெற்றதே இதுவரை கின்னஸ் சாதனையாக இருந்து வந்தது.

தற்போது ஆந்திராவை சேர்ந்த இந்த மூதாட்டி 74 வயதில் குழந்தை பெற்றது மூலம் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Leave a Comment