Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

ஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

ஆட்சிக்கு வந்ததும் வேலையை காட்ட ஆரம்பித்த திமுக! எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திமுகவினரின் செயல்பாடுகளை விமர்சனம் செய்ததற்காக தற்போதுள்ள ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி அதிமுகவினர் மீது பொய் வழக்கு தொடுப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.

சொன்னதை செய்வோம்,செய்வதை சொல்வோம்” என்று பிரச்சாரம் செய்து, ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியாளர்களின் சொல் வேறு, செயல் வேறாக உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் கருத்து சுதந்திரம் என்ற பெயரில், அம்மாவின் அரசினை தரக் குறைவாக விமர்சித்ததற்காக பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்துள்ளார்.

மாற்றாரை எந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சித்தாலும், அது கருத்து சுதந்திரம். அதுவே தங்கள் ஆட்சியையும், தங்கள் கட்சியினரையும், சமூக வலைதளங்களில் நாகரீகமாக விமர்சித்தாலே, அதனை மாபெரும் குற்றமாகக் கருதி, தனக்குக் கீழ் உள்ள காவல் துறையினரை ஏவி வழக்கு தொடுப்பது, கட்சியினரைவிட்டு மிரட்டுவது போன்ற திமுக-வினருக்கே உரித்தான, அடிப்படையான செயல்களைப் பார்க்கும் போது, திமுக-வினர் இன்னும் மாறவில்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது.

திரு. ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் “எங்களுக்கு வாக்களித்தோருக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் நடுநிலையாக இருந்து செயலாற்றுவோம்” என்றார். திமுக-அரசு தனது தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக நிறைவேற்றுவோம், முதல் கையெழுத்திடுவோம் என்று கூறிய பல முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதையும்.

திமுக-அரசு மற்றும் அமைச்சர்களாக உள்ளவர்களின் செயல்பாடுகளை நியாயமான முறையில் சமூக வலைதளங்களுக்கே உரிய கருத்து சுதந்திரத்தின்படி, மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த நிர்வாகிகளை, காவல் துறையை வைத்து, இந்த அரசை தரக் குறைவாக விமர்சிப்பதாகக் கூறி வழக்கு பதிவு செய்கிறார்கள்.

இவ்வாறு, News J செய்தி தொலைகாட்சி உட்பட, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 120 கழக உறுப்பினர்களிடம், சமூக வலைதளங்களில் பதிவிட்ட உங்கள் பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும்; இல்லையெனில் உங்கள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று மிரட்டி வருகிறார்கள்.

மேலும், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, திமுக-வின் நடவடிக்கைகளை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதியப்பட்ட கருத்துக்களுக்காகவும் இப்போது வழக்கு போடப்படுகிறது. அப்போதே சட்ட நடவடிக்கை எடுக்காமல், இப்போது ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கிறது என்று நினைப்பது கண்டிக்கத்தக்கது.

தமிழ் நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொள்வதை விடுத்து, பொய் வழக்கு தொடுப்பதில் நாட்டம் செலுத்திவரும் திமுக-அரசு இத்தகைய மக்கள் விரோதப் போக்கை, ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதுபோன்ற செயல்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், அதன் ஒன்றரை கோடித் தொண்டர்களையும் அடக்கி, ஒடுக்கி, ஒழித்துவிடலாம் என்று திமுக ஆட்சியாளர்கள் கருதினால் அது பகல் கனவாகவே முடியும்.

முதல்வராக இருந்த என் மீதும், அமைச்சர்கள் மீதும், கழக நிர்வாகிகள் மீதும், மிகமிகக் கேவலமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும், நரகல் வகையிலும், நரகல் நடையிலும், நாராசாரமாகவும், திமுக-வின் தலைமை முதல் கடைசி பேச்சாளர்கள் வரை கடந்த பல ஆண்டுகளாக அவதூறு பரப்பி வந்ததை மக்கள் அறிவார்கள்.

இதனால் மன உளைச்சல் அடைந்தவர்கள், உரிய நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு தொடர்ந்தால், எங்களின் பேச்சுரிமையில், எழுத்துரிமையில், கருத்துரிமையில் அரசு தலையிடலாமா என்றெல்லாம் உரக்கக் கூச்சலிட்டனர். அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யும்படி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நெருப்பில் பூத்த மலர்..தொண்டர்கள், இயக்கம் காக்க சர்வபரி தியாகத்தையும் செய்யக் கூடியவர்கள்.

“அஞ்சுவது யாதொன்றுமில்லை – அஞ்ச வருவதுமில்லை” என்று, எங்களை தீய சக்திகளிடம் இருந்து காத்து நின்ற அம்மாவின் வைர வரிகளை நெஞ்சில் ஏந்தி நிற்கும் வீர மறவர்கள் நாங்கள்.

திமுக-வினர், தங்களுக்குள்ள அத்தனை உரிமைகளும் மற்றவர்களுக்கும் உண்டு என்பதை வசதியாக மறந்துவிட்டு, தற்போது ஆட்சி அதிகாரம் கைக்கு வந்துவிட்டது என்று காவல் துறையின் மூலம் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, காவல் தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் கட்டிக் காக்கப்பட்டு, தற்போது கழகத் தொண்டர்களால் எஃகுக் கோட்டையாக பாதுக்காக்கப்படும் கழகத்திற்கு எதிரான அடக்கு முறையை, உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

திமுக அரசின் இந்த அடக்குமுறையினையும், பொய் வழக்குகளையும் சட்ட ரீதியாக சந்திக்கக்கூடிய வல்லமை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் சட்டப் பிரிவிற்கும் உண்டு என்பதை இந்த ஆட்சியாளர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment