திமுக அமைச்சர் முன்னே கைகட்டி இருந்தேனா? கொந்தளிக்கும் திருமாவளவன்..!
திமுக அமைச்சர் முன்னே கைகட்டி இருந்தேனா? நான் யாருக்கும் பணிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியலில் என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இவ்வாறு அவதூறு பரப்புகிறார்கள். கை கட்டுவது என்பது என்னுடைய மேனரிசம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
சமீபத்தில் திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை பார்ப்பதற்காக அவரது இல்லத்திற்கு சென்றிருக்கிறார். அந்த சந்திப்பின்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் விலையுயர்ந்த சோபாவில் அமர்ந்திருக்க அவருக்கு முன்னால் திருமாவளவன் உடைந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். மேலும் அமைச்சருக்கு முன்பு பணிவாக கைகட்டிய நிலையில் உட்காந்திருந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இது தான் திமுகவின் சமூக நீதியா? என சமூக வலைத்தளங்களில் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர்.குறிப்பாக அதே அமைச்சர் மற்ற தலைவர்களை சந்திக்கும்போது எப்படி நடந்து கொண்டார்.திருமாவளவனுடன் நடந்த சந்திப்பின்போது எவ்வாறு நடந்து கொண்டார் என தொடர்புபடுத்தி விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு விளக்கமளித்த திருமாவளவன், ‘’அந்த ப்ளாஸ்டிக் சேரை நானே தான் இழுத்துப்போட்டு உட்கார்ந்தேன். எனக்கு என்ன தேவை இருக்கிறது? நான் பணிந்து போய் உட்கார வேண்டிய அவசியமே கிடையாதே. சந்தர்ப்பவாதிகள், குதர்க்கவாதிகள், காழ்ப்புணச்சி கொண்டவர்கள்,விடுதலை சிறுத்தைகள் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் ஏதாவது சேரு பூச வேண்டும் என நினைக்கிறார்கள்.அதற்காகவே இதையெல்லாம் பெரிதுபடுத்தி எழுதி வருகிறார்கள்.
அதனை நான் ஓருபோதும் பொருட்படுத்த மாட்டேன். எனது நலனில் அக்கறை உள்ளவர்கள் கேட்டால் நான் பதில் சொல்வேன். எனது அம்மா முன்னால் கைகட்டி நிற்பேன். எனது தோழர்கள் முன்னால் கைகட்டி நிற்பேன். இது என்னுடைய மேனரிசம் அது. இதைக்கூட புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றால் அது அவர்களது இயலாமை, ஆற்றாமையை தான் காட்டுகிறது’’ என விளக்கமளித்துள்ளார்.