தமிழிசை சௌந்திரராஜன் பதவியை ராஜினாமா செய்தாரா ? காரணம் என்ன?
தெலுங்கானா மாநிலம் மற்றும் புதுவையின் ஆளுநராக பதவி வகிப்பவர் தமிழிசை சௌந்திரராஜன். இவர் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால் அவர் தனது பதவியினை ராஜினாமா செய்து விட்டாராம். அதற்கான ராஜினாமா கடிதத்தையும் அவர் இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சௌந்திரராஜன் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியினை தழுவினார். அதன் பின்னர் செப்டம்பர் 1-2019, அவர் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் பிப்ரவரி,2021 புதுவை மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் என்னும் கூடுதல் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ – தமிழிசை சௌந்திரராஜன்
பாஜக கட்சியின் அடிமட்ட தொண்டராக இருந்து மாநில தலைவர் பதவி வரை உயர்ந்தவர் தான் தமிழிசை சௌந்திரராஜன். ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்னும் இவரது சூலுரை தமிழக மக்களால் விமர்சிக்கப்பட்டாலும் ரசிக்கவும் பட்டது, இன்றளவு நினைவிலும் உள்ளது என்றால் அது மறுக்கமுடியாத ஒன்றாகும். பொதுவாக ஆளுநர் பதவியில் இருப்போர் அரசியலில் இருந்து விலகி இருப்பார்கள். ஆனால் இவர் தெலுங்கானா, தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வது வழக்கம். இதற்கிடையே, இவரது ராஜினாமா கடிதம் சற்று பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் மக்களவை தேர்தலில் இவர் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களுள் போட்டியிடலாம் என்னும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.