அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் காரணமாக அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி உயர்வு
அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போர் காரணமாக, அமெரிக்கா உடனான இந்தியாவின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல்பாதியில் 755 மில்லியன் டாலர் அளவில்அமெரிக்காவுக்கு இந்தியா கூடுதல் ஏற்றுமதியை மேற்கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக வேதிப் பொருட்கள், உலோகங்கள், தாதுப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியா அதிக அளவில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆண்டு முதலே அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வர்த்தகப் போர் நிலவி வருகிறது. சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவும், அமெரிக்கப் பொருட்களுக்கு சீனாவும் வரி விகிதத்தை கடுமையான அளவில் உயர்த்தின. இதனால் இரு நாடுகளும் பாதிப்பைச் சந்தித்தன. அந்தவகையில் சீனாவின் ஏற்றுமதி அமெரிக்காவில் குறைந்ததனால், அந்த வாய்ப்புகள் பிற நாடுகளுக்கு கிடைத்தன.
கிட்டத்தட்ட 21 பில்லியன் டாலர் அளவில் அமெரிக்கா உடனான சீனாவின் வர்த்தகம் வேறு நாடுகளுக்கு திசைமாற்றப்பட்டது. இதில் தைவான், மெக்ஸிகோ, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பெரும் பயன் அடைந்தன. இந்தியா, கொரியா, கனடா ஆகிய நாடுகள் குறைந்த அளவில் பயன் அடைந்தாலும், அமெரிக்கா உடனான அந்நாடுகளின் வர்த்தகம் 0.9 பில்லியன் முதல் 1.5 பில்லியன் வரைஉயர்ந்துள்ளது.
இந்த வர்த்தகப் போரினால் இந்தியா நடப்பு நிதி ஆண்டின் முதல்பாதியில் அமெரிக்காவுக்கு 755 மில்லியன் டாலர் அளவில் கூடுதல் ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளது. வேதிப் பொருட்கள் 243 மில்லியன் டாலர் அளவிலும், தாது மற்றும் உலோகங்கள் 181 மில்லியன் டாலர் அளவிலும், மின் இயந்திரங்கள் 83 மில்லியன்டாலர் அளவிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தவிர வேளாண் பொருட்கள், அலுவலக இயந்திரங்கள், ஜவுளிப் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் உயர்ந்துள்ளன.
நடப்பு நிதி ஆண்டின் முதல்பாதியில் 35 பில்லியன் டாலர் அளவில் அமெரிக்காவுடனான ஏற்றுமதியை சீனா இழந்துள்ளது. இந்த இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகப் போர் அந்த இரு நாடுகளை மட்டும் பாதிப்பதில்லை, மாறாக உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என்று ஐ.நா வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.