தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்-அஸ்வின், ஷமி, ஜடேஜா கொடுக்கும் நெருக்கடி
புனே:
அஸ்வின், ஷமி, ஜடேஜா ஆகியோரின் துல்லியம், நெருக்கடி தரும் பந்துவீச்சால் புனேயில் நடந்து வரும் 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்து திணறி வருகின்றனர்.
தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸைக் காட்டிலும் 404 ரன்கள் பின்தங்கியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி.
76 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 197 ரன்கள் சேர்த்துள்ளது. பிலாண்டர் 21 ரன்னிலும், கேசவ் மகராஜ் 21 ரன்னிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
முகமது ஷமியின் துல்லியம், அஸ்வின், ஜடேஜாவின் நெருக்கடி தரும் சுழற்பந்துவீச்சும் இன்றைய ஆட்டத்தின் முத்தாய்ப்பாகும்.
அனுபவம் மிகுந்த பேட்ஸ்மேன்கள் டூப்பிளஸி, டீகாக் இருவரும் விக்கெட் சரிவில் இருந்து அணியைக் காக்க ஒருகட்டத்தில் கடுமையாகப் போராடினார்கள். ஆனால், இவர்களின் போராட்டத்தை அஸ்வின் முடிவுக்கு கொண்டு வந்து திருப்புமுனையை ஏற்புடுத்தினார்.
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் சேர்த்திருந்தது.
புர்யன் 20 ரன்களிலும், நார்ட்ஜே 2 ரன்களிலும் இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். இருவரும் சிறிதுநேரம் மட்டுமே தாக்குப்பிடித்தனர்
முகமது ஷமி வீசிய பந்தில் 4-வது ஸ்லிப்பில் நின்றிருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து நார்ட்ஜே 3 ரன்னில் வெளியேறினார்.
உண்மையில் ஷமி வீசிய அந்த பந்து அருமையானது, வேகத்துடன் கூடிய ஸ்விங் பந்து என்பதால், நார்ட்ஜேவால் பேட்டை ஒதுக்க முடியவில்லை, கட் ஷாட் அடிக்கவும் முடியவில்லை. பந்து பேட்டில் பட்டவுடன் 4-வது ஸ்லிப்பை நோக்கிச் சென்றது. அங்கு நின்றிருந்த கோலி, அருமையான டைவ் அடித்து பிடித்து விக்கெட்டை சாய்த்தார்.
தொடக்கத்தில் இருந்தே அவுட் ஸ்விங்குகளை வீசி பேட்ஸ்மேன்களை திணறவிட்ட உமேஷ் யாதவ் இன்றும் அசத்தலாகப் பந்துவீசினார்.
புதிய பந்து என்பதால், உமேஷ் யாதவுக்கு பந்து நன்றாக ஸ்விங் ஆனது. நைட்வாட்ச்மேன் ஆன்ரிச் நார்ட்ஜே 30 ரன்கள் சேர்த்திருந்தபோது, உமேஷ் யாதவ் வீசிய அவுட் ஸ்விங் பந்தில் விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
6-வது விக்கெட்டுக்கு டிகாக், டூப்பிளசி இருவரும் நிதானமாக பேட் செய்து விக்கெட் சரிவைத் தடுத்தனர். டூப்பிளஸி அவ்வப்போது பவுண்டரி அடித்து ரன்கள் சேர்த்தார்.
இருவரையும் பிரிக்க இந்திய வீரர்கள் சிறிது பிரயத்தனம் செய்தார்கள். ஆனால், அஸ்வின் பந்துவீ்ச்சை தவறாகக் கணித்து ஆடிய டீகாக் பந்தை ஸ்டெம்புக்கு அருகே விட்டு கட் செய்ய முயன்றார். ஆனால் பந்து அவரை ஏமாற்றி, போல்டாக்கியது. 31 ரன்களில் டீகாக் வெளியேறினார்.
அடுத்துவந்த முத்துசாமி, டூப்பிளஸியுடன் இணைந்தார். நிதானமாக பேட் செய்த டூப்பிளஸி அரைசதம் அடித்தார். கடந்த போட்டியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய முத்துசாமி இந்த முறை சொதப்பினார்.
ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கிய முத்துசாமி 7 ரன்னில் வெளியேறினார். அடுத்து சிறிதுநேரத்தில் அஸ்வின் பந்துவீச்சில் 64 ரன்கள் சேர்த்திருந்த டூப்பிளசிஸ் ரஹானேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பிலாண்டர் 21 ரன்னிலும், கேசவ் மகராஜ் 21 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.