தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு – அரசு அதிரடி
கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமானது மமுடியா நிலையில் அடுத்து மூன்றாம் அலை பரவ தொடங்கியுள்ளது.மேலும் உருமாறிய கொரோனா குறித்த அச்சமும் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.இதனிடையே உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரவலை கட்டுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் தடுப்பூசியின் மீதுள்ள அச்சம் காரணமாக பலரும் தடுப்பூசி செலுத்த தயங்குகின்றனர். இந்நிலையில் தான் பாகிஸ்தானில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என அதிரடி அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
தற்போது வரை பாகிஸ்தானில் 10 லட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்து 54 ஆயிரத்து 711 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 702 பேர் மீள முடியாமல் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். இதனையடுத்து அங்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையானது தீவிரப்படுத்தபட்டுள்ளது.
இதற்காக அங்கு கூடுதலான எண்ணிக்கையில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டு, முகாம்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏதும் இல்லை என பாகிஸ்தான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிப்பு, அலுவலகம் வர அனுமதி மறுப்பு, சம்பளம் கிடையாது, ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களில் நுழைய அனுமதி ரத்து என பல அதிரடி நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது.இந்த நடவடிக்கைகளால் மக்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
மேலும் தடுப்பூசி முகாம்களில் மணிக்கணக்கில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக அங்கிருந்து வரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்கள் பயமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்வதை முன்னெடுக்க இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் உலக நாடுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.