வீட்டிற்கு பின்னால் புதிதாக கட்டியிருந்த நீச்சல் குளத்தில் மாமனார், மருமகள் மற்றும் பேத்தி உள்ளிட்டோர் மூழ்கி உயிரிழந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் பாரத் பட்டேல். இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் அமெரிக்காவில் உள்ள நியூஜெர்சி மாகாணத்தில் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் 5 படுக்கை அறைகளை கொண்ட ஒரு பிரம்மாண்ட வீட்டினை விலைக்கு வாங்கினார். இதனையடுத்து இவ்வளவு பெரிய அந்த வீட்டில் நீச்சல் குளம் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும், என்று அனைவரும் ஆசைப்பட்டனர்.
அவர்களின் ஆசைக்கேற்றவாறு அந்த வீட்டின் பின்புறத்தில் அழகான நீச்சல் குளம் கட்டி அமைக்கப்பட்டது. நேற்று திடீரென்று புதியதாக கட்டப்பட்ட அந்த நீச்சல் குளத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் அந்நாட்டின் அவசர எண் 911 க்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அங்கு கண்ட காட்சி அவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பாரத் பட்டேல், அவருடைய மருமகளான நிஷா மற்றும் 8 வயது பேத்தி ஆகியோர் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்து கிடந்தனர். பின்னர் உடனடியாக அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இவ்வாறு நீச்சல் குளத்தில் மூழ்கி 3 பேர் இறந்தபோது அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்குள் தான் இருந்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாமனார் மற்றும் மருமகள் உள்ளிட்டோர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இந்த சம்பவமானது நியூஜெர்ஸி மாகாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.