Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/livetamilnews.com/public_html/wp-includes/functions.php on line 6131

ராமநாதபுரம் வைகைக் கரையில் சங்ககால நகரம் இருந்ததற்கான தடயம் கண்டுபிடிப்பு

ராமநாதபுரம் வைகைக் கரையில் சங்ககால நகரம் இருந்ததற்கான தடயம் கண்டுபிடிப்பு

ramanathapuram-people-demand-asi-excavation

ராமேசுவரம்

ராமநாதபுரம் அருகே சோழந்தூரில் வைகையின் கிளையாறான நாயாற்றின் கரையில் சிதறிக் கிடக்கும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மூலம் புதைந்த நிலையில் ஒரு சங்க கால நகரம் இருந்த தடயத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.

சோழந்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள குளங்களை தூர்வாரும் போது உடைந்த ஓடுகள் வெளிப்பட்டுள்ளன. அவ்வூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மூலம் இதை அறிந்த ஆங்கில ஆசிரியர் சுல்தான் ஜமீர் அலி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுருவிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அப்பகுதியில் மேற்பரப்பாய்வு செய்த பின் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு, “இவ்வூரின் தெற்கில் இரண்டு பிரிவாக பிரிந்து ஓடும் நாயாறு, வைகையின் ஒரு கிளை ஆறு திருப்பாலைக்குடியில் கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் கரையில் உள்ள ஓடுகள் சிதறிக் கிடக்கும் மேடான பகுதியை திடல் என அழைக்கிறார்கள்.

குளங்களை தூர்வாரிய போது சுடுமண் உறைகிணற்றின் ஓடுகள், தடித்த, மெல்லிய கருப்பு சிவப்பு பானை ஓடுகள் வெளிவந்துள்ளன. ஒரு சுடுமண் உறையின் உயரம் 16.5 செ.மீ., அகலம் 4.5 செ.மீ. ஆகும். உறைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவது, செருகுவது என உறைகிணறுகளில் இருவகைகள் உண்டு. ஒரே அளவுள்ள இரு வட்டமான சுடுமண் உறைகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய அமைப்பு கொண்ட கிணறு இங்கு இருந்துள்ளது.

திடல் பகுதியில் கருப்பு சிவப்பு பானை ஓடுகளுடன், வெள்ளைக் களிமண்ணால் உருவாக்கப்படும் சீனநாட்டு போர்சலைன் ஓடுகளும் காணப்படுகின்றன.

இங்கு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இங்கிருந்து ½ கி.மீ. தூரத்தில் முதுமக்கள் தாழியின் ஓடுகளும் உள்ளன. இதற்கு இடைப்பட்ட பகுதியில் சன்னாப் மேடு என்னுமிடத்தில் செங்கலால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தின் அடிப்பக்கம் மட்டும் உள்ளது. இதில் உள்ள உடைந்த ஒரு செங்கலின் அகலம் 15 செ.மீ. உயரம் 6 செ.மீ. ஆகும். இது அழிந்துபோன ஒரு கோயிலாக இருக்கலாம். இதன் அருகில் கருங்கல்லால் ஆன முழுமையடையாத 5 அடி உயரமுள்ள அமர்ந்த நிலையிலான ஒரு திருமால் சிற்பம் உள்ளது. அதை முனீஸ்வரராக வழிபடுகிறார்கள். அதேபோல் குளத்தின் கிழக்கில் வட்ட வடிவ ஆவுடையாருடன் ஒரு சிவலிங்கமும் உள்ளது.

இவ்வூரில் சங்க கால கருப்பு சிவப்பு பானை ஓடுகளுடன் இடைக்காலத்தைச் சேர்ந்த தடயங்களும் காணப்படுகின்றன. இவ்வூரின் பெயர் சோழர்களை நினைவுபடுத்துகிறது. சங்க காலம் முதல் இடைக்காலம் வரை பல நூற்றாண்டுகளாக இவ்வூர் சிறப்புற்று இருந்துள்ளது. சங்ககாலத்தைச் சேர்ந்த சர்வதேச வணிக நகரமான அழகன்குளத்தின் சமகால ஊரான இவ்வூர் அங்கிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ராமநாதபுரத்திலிருந்து சோழந்தூர் செல்லும் வழியில் சக்கரவாளநல்லூர் சங்ககால, இடைக்கால வாழ்விடப் பகுதியாகவும், தேவிபட்டினம், சிங்கனேந்தல், முத்துசாமிபுரம் ஆகிய ஊர்கள் இடைக்கால வாழ்விடப் பகுதிகளாகவும் உள்ளன.

மத்திய தொல்லியல் துறை அல்லது தமிழ்நாடு தொல்லியல் துறை இப்பகுதிகளில் அகழாய்வு செய்து இவ்வூரின் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிக்கொணர வேண்டும்” என்றார்.

Leave a Comment