பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஆர் பி ஐ எடுக்கும் முக்கிய முடிவு
நாட்டில் பணவீக்கம் 7 சதவீதமாக இருந்து வரும் இந்த சூழலில் அதை கட்டுக்குள் வைக்க மீண்டும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார்.
முன்னதாக, ரிசர்வ் வங்கியின் கொள்கைக் கூட்டம் கடந்த புதன் கிழமை ஆகஸ்ட் 3 அன்று தொடங்கியது. மூன்று நாட்களுக்கு நடைபெற்ற இந்தக் கூட்டம் இன்று ஆகஸ்ட் 5ஆம் தேதி முடிவடைகிறது. இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் கொள்கை கூட்டத்தின் முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிடுவார்.
கடந்த சில தினங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு பற்றி நடந்த விவாதத்தில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பணவீக்கத்தை 6 சதவீதத்திற்கு கீழ் வைத்திருக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகக் கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்துப்படி இன்று ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி அறிவிக்க சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன. இந்த உயர்வானது 25 முதல் 50 அடிப்படை புள்ளிகள் வரை இருக்கக் கூடும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
ஏற்கனவே பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி இரண்டு முறை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதால் வீடு, வாகனக் கடன்களுக்கான இஎம்ஐ உயர வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.