கிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை! நிலைமையை சமாளிக்க மத்திய அரசு எடுத்த தீவிர முடிவு
சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை நாடு முழவதுமாக கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இந்த திடீரென்று ஏற்பட்ட விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆப்கானிஸ்தான், எகிப்து, துருக்கி, ஈரான் உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள லாசல்கான் பகுதியிலுள்ள வெங்காய சந்தையிலிருந்து தான் நாடு முழுவதுக்கும் வெங்காயம் அனுப்பப்படுகிறது. அந்த மாநிலத்திற்கு அடுத்த நிலையில் கர்நாடக மாநிலத்திலும் வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பருவமழை தவறி விட்டது. இதனால் அங்கு தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் மற்றும் மஹா புயல் சின்னத்தால் மகாராஷ்டிராவில் கடுமையான மழை கொட்டித் தீர்த்தது.
பருவம் தவறி பெய்த இந்த மழையால் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வெங்காயப் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இதனால் வெங்காயம் விளைவித்த விவசாயிகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் போதுமான அளவு வெங்காயம் சந்தைக்கு வராத நிலையில் அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனால் நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டெல்லி மட்டுமின்றி அலகபாத், ஜெய்ப்பூர், போபால் உள்ளிட்ட நகரங்களில் கூட வெங்காயம் சில்லறை விற்பனையில் 100 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
இதனையடுத்து வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வரும் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. மேலும் வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளும் உத்தரவிட்டுள்ளன.
நாடு முழுவதும் பல இடங்களில் தற்போது கையிருப்பாக வைத்துள்ள வெங்காயத்தை கண்காணித்து தேவைக்கு போதுமான அளவில் விநியோகம் நடைபெறுவதை உறுதிபடுத்துமாறு தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இதனையடுத்து வர்த்தக மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா சென்றுள்ளனர். நாட்டில் அதிகமாக வெங்காயம் உற்பத்தியாகும் இந்த மாநிலங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு போதுமான அளவு வெங்காயம் சப்ளை செய்யப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அத்துடன், நாடு முழுவதும் பெரிய வெங்காயத்தின் விலை சற்று கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் விலைவ உயர்வைக் கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான், ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த எதிர்பாரத விலை உயர்வை கட்டுபடுத்த இந்த நாடுகளில் இருந்து கடல் வழியாக 80 முதல் 100 கண்டெய்னர்கள் அளவுக்கு பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படும் என வர்த்தகத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.