தமிழகத்தில் நடப்பது “தந்திர மாடல் ஆட்சி” ! திமுகவை கடுமையாக விமர்சித்த எடப்பாடியார் ..!!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கோவை மாவட்டம் கருத்தம்பட்டியில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு கிருத்துவ கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு மக்களுக்கு எதிரான திமுகவின் செயல்பாடுகளை குறித்து பேசினார். மாநாட்டில் எடப்பாடியாரின் பேச்சு சிறுபான்மை மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது.
இதனை தொடர்ந்து சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக அரசு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்த திமுக தற்பொழுது அரசு பேருந்திற்கான பயன்பாட்டை தொடர்ந்து குறைத்து வருகிறது. இது தான் திமுகவின் தந்திரச் செயல். தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000 வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக தங்கள் கட்சியை சேர்ந்த பெரும்பாலான பெண்களை பயனாளிகளாக கொண்டு அவர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கி வருகிறது. இதனால் ஏழை, எளிய தாய்மார்களை ஏமாற்றப்பட்டு விட்டனர். இதுபோல் பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து ஆட்சிக்கு வந்த திமுக… திராவிட மாடல் அரசு அல்ல… தந்திர மாடல் அரசு என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும் கடந்த பொங்கல் பண்டிகையின் போது திமுக அரசு கொடுத்த வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தரமற்று இருந்தது. இதை மக்கள் பயன்படுத்தவே யோசித்தார்கள். இது குறித்து அரசுக்கு தெரிவித்தேன். பொங்கல் பண்டிகைக்கான பரிசு பொருட்கள் தரமற்று வழங்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து தற்பொழுது வரை நடைபெற்று வருகிறது. வரவுள்ள பொங்கல் பண்டிகைக்காவது திமுக அரசு தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன் என்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.