விஜயகாந்த் உடல் நிலையில் பின்னடைவு!! ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கவலை..!!
தமிழ் திரையுலகின் 80, 90 காலகட்டங்களில் முன்னணி மாஸ் ஹீரோவாக வலம் வந்தவர் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த். தனது கருத்துள்ள படங்களால் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கை பெற்ற இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக) என்ற பெயரில் கட்சி தொடங்கினார். அதிமுக, திமுகவிற்கு அடுத்த பெரிய கட்சியாக தேமுதிக உருவெடுத்து மற்ற கட்சிகளுக்கு ஷாக் கொடுத்தது.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தேமுதிகவை கடந்த 2011 ஆம் ஆண்டு வரை சிறப்பாக வழி நடத்தி வந்த நிலையில் பின்னர் அவருக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவால் கட்சி பொறுப்பில் இருந்து விலகினார். உடல் நல பாதிப்பு தீவிரமடைந்து அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் உடல் எடை குறைந்து சோர்வாக காணப்பட்டார். இதனால் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கேப்டன் மீண்டு வர வேண்டும் என்று தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் மார்பு சளி, இடைவிடாத இருமல் காரணமாக கடந்த நவம்பர் 18 ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்பு சளி, இடைவிடாத இருமல் காரணமாக அவருக்கு 14 நாட்களுக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சை தேவைப்படுகிறது. தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறோம் என மருத்துமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி அவரது ரசிகர்களையும், தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. கேப்டன் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அவரது தொண்டர்கள் தற்பொழுது தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.