கே.சி.எல் எனப்படும் குடியாத்தம் கிரிக்கெட் லீக்! ஏலத்தில் பல உள்ளூர் வீரர்கள் பங்கேற்பு!!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடைபெறவிருக்கும் குடியாத்தம் கிரிக்கெட் லீக் தொடருக்கான ஏலத்தில் ஏராளமான உள்ளூர் வீரர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைக்கின்றது. இந்த தொடருக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் அணிகளில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர்.
ஐபிஎல் போலவே தமிழ்நாட்டில் மாநில அளவில் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரும் தொடங்கி நடைபெற்று வருகின்றது. தற்போது டி.என்.பி.எல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் நகரில் இது போலவே குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது.
குடியாத்தம் கிரிக்கெட் லீக் தொடரில் 12 அணிகள் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வீரர்களை தேர்வு செய்ய நடககும் ஏலம் போலவே குடியாத்தம் கிரிக்கெட் லீக் தொடருக்கு ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உள்ளூர் வீரர்களை மட்டும் கொண்டு இந்த ஏலம் நடைபெற்றது.
இந்த குடியாத்தம் கிரிக்கெட் லீக் தொடரின் ஏலத்தில் பங்கேற்ற 12 அணிகளுக்கும் தலா 15000 புள்ளிகள் வழங்கப்பட்டது. இந்த 15000 புள்ளிகளை வைத்து ஒவ்வொரு அணியும் தலா 15 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம். ஒரு வீரர் 5 முறை ஏலத்தில் பங்கேற்றுக் கொள்ளலாம்.
குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 370 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுக் கொள்ள பதிவு செய்தனர். மேலும் உள்ளூரில் இருந்தும் பல வீரர்கள் பங்கேற்றனர்.
இந்த குடியாத்தம் கிரிக்கெட் லீக் தொடர் ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவான 15ம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது. குடியாத்தம் கிரிக்கெட் லீக் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 50000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.