பரபரப்பான எலிமினேட்டர் சுற்று ஆட்டம்! வாழ்வா சாவா ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நெல்லை அணி!!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று(ஜூலை8) நடைபெற்ற பரபரப்பான எலிமினேட்டர் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நேற்று அதாவது ஜூலை 8ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் லீக் சுற்றில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மதுரை பேந்தர்ஸ் அணியும விளையாடியது. இதில் டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய நெல்லை ராயல் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 211ரன்கள் குவித்தது. நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 76 ரன்கள் சேர்த்தார். மறொரு பேட்ஸ்மேன் அஜிதேஷ் குருசுவாமி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து 30 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு பேட்ஸ்மேன் ரித்திக் ஈஸ்வரன் 10 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். மதுரை பேந்தர்ஸ் அணியில் பந்துவீச்சில் குர்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முருகன் அஷ்வின், அஜய் கிருஷ்ணா, ஸ்வப்நில் சிங், சரவணன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 212 ரன்கள் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
212 ரன்கள் எனற இமாலய இலக்கை கொண்டு களமிறங்கிய மதுரை பேந்தர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஹரி நிஷாந்த் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன் வி ஆதித்யா மற்றொரு தொடக்க வீரர் சுரேஷ் லோகேஷ்வர் உடன் சேர்ந்து ரன் சேர்க்க தொடங்கினார்.
அதிரடியாக விளையாடிய சுரேஷ் லோகேஷ்வர் 40 ரன்களுக்கு ஆட்டமிழக்க தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வி ஆதித்யா அரைசதம் அடித்தார். உடன் இணைந்த ஸ்வப்நில் சிங் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். மதுரை அணி 175 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 73 ரன்கள் எடுத்த வி ஆதித்யா ஆட்டமிழந்தார்.
கடைசி மூன்று பந்துகளுக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இறுதி ஓவரின் 4வது பந்தில் 48 ரன்கள் எடுத்திருந்த ஸ்வப்நில் சிங் ஆட்டமிழந்தார். இதையடுத்து 2 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அடுத்து களமிறங்கிய மதுரை அணியின் பேட்ஸ் மேன் சரவணன் ஆட்டத்தின் இறுதி ஓவரின் 5வது பந்தை சிக்ஸ் அடித்து நெல்லை அணிக்கு சிறிது அதிர்ச்சி கொடுத்தார்.
ஆட்டத்தின் கடைசி பாந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நெல்லை அணியின் பந்துவீச்சாளர் மோகன் பிரசாத் வீசிய பந்தில் மதுரை அணி பேட்ஸ்மேனால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது குவாலிபையர் சுற்றுக்கு முன்னேறியது.
4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் சிறப்பாக விளையாடிய நித்திஷ் ராஜகோபால் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஜூலை 10ம் தேதி நடைபெறவுள்ள இரண்டாவது குவாலிபையர் சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இதில் வெற்றி பெறும் அணி டிஎன்பிஎல்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.